ஒரு நாளின் 24 – ன் மணிநேரத்தில் நீங்கள் இதுவரைப் பயன்படுத்திய நேரத்தினை சற்றே சிறிது அதிகப்படுத்திப் பாருங்கள். அதுவும் விடியற்காலையில்….பெரும்பாலான பெண்கள் எல்லோரும் குறைந்தபட்சம் 5 மணிக்கே எழுந்திருப்பது உண்மை தான். ஆனால் அவ்வாறு எழுந்து என்ன செய்கிறோம்? யோசித்துப் பார்த்தால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகள் க்ரைண்டராக சுற்றுவார்கள் என்றால், வேலைக்குப் போகும் பெண்கள் மிக்ஸியாக சுற்றுவார்கள். அதில் துளியும் சந்தேகம் இல்லை.
ஆனால் அவ்வாறு பம்பரமாக சுற்ற ஆரம்பிக்கும் முன்னர் எல்லா பெண்களுமே ஒரு பத்து நிமிடங்கள் கண்டிப்பாக இன்று எப்படி பொழுது நமக்குக் காத்திருக்கின்றதோ… என்று கவலையாகவோ அல்லது அன்றைய சமையல் குறித்தோ, யோசனையில் இருப்பார்கள். அல்லது ஒன்றும் தோன்றாமல் வீட்டிற்குள்ளேயே ஓரிறு முறை சுற்றியோ கூட வந்துகொண்டிருப்பார்கள். அத்தகைய பத்து நிமிடங்களும், அதனோடு கூட தினமும் காலை நாம் எழுந்திருக்கும் நேரத்திற்கு ஒரு பத்து நிமிடம் முன்னதாக எழப்போகும் அந்த பத்து நிமிடங்களும் சேர்ந்து, ஆக ஒரு இருபது நிமிடங்கள் தினமும் இருபதே நிமிடங்கள் பல்லைக் கடித்துக் கொண்டு இதற்கு ஒதுக்குங்கள். இதற்கு என்றால் ‘காலை நடை’-க்கு[Morning walk]… ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு என்றால் ஆரம்பத்தில் இந்த விசயத்தைக் காதில் கேட்டாலே சட்டென்று ‘ஆமாம்…ஏற்கனவே காலில் வெந்நீர் கொட்டியது போலத் தான் ஓடுகிறோம். இதில் இது வேறா?…’ என்று நிச்சயமாக புலம்புவோம்.
ஆனால் இல்லத்தரசிகளே! நீங்கள் ஒதுக்கும் இந்த ஒரு இருபது நிமிடம் மட்டுமே நீங்கள் உங்களின் உடல் நலனுக்காக ஒதுக்கும் சரியான நேரம் ஆகும். நீங்கள் கேட்கலாம்… ‘நாள் முழுவதும் ஓடுகிறோம். இதில் தனியாக வேறு ஓடவேண்டுமா?’ என்று. ஒன்று உங்களுக்கு தெரியுமா? விடியற்காலையில் நடக்கும் அல்லது ஓடும் அந்த நேர செயல் மட்டுமே உங்களின் ஆரோக்கிய உடலுக்கு வழிவகுக்கும். மற்ற நேரங்களில் நீங்கள் எவ்வளவு தான் ஓடினாலும் அல்லது வேலை செய்கிறேனே என்று நடந்துகொண்டே இருந்தாலும் கூட ஒன்றும் வேலைக்கு ஆகாது.
அழகான சூரியோதய காட்சியைப் பார்த்துக்கொண்டே நடப்பது, அதுவும் மனதில் உங்கள் குடும்ப செயல்பாடுகளைப் பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் நடப்பது என்பது மிக அற்புதமான ஒரு நிகழ்வு. முதலில் சில நாட்கள் கடினமாக தெரியும் அதற்கான நேர ஒதுக்கல் பின்னர் நீங்கள் யோசித்தும் பார்க்காத ஒரு அற்புதமான நிகழ்வாக தெரிய ஆரம்பிக்கும். கண்ணாடியில் பார்க்கும் நமது முகம் ஒரு ஜாலியான, மனஅழுத்தமில்லாத முகமாகத் தெரியும். [அதற்கு அர்த்தம் ‘குடும்ப கவலைகள் நம்மைவிட்டு ஓடிவிடுமாக்கும்’ என்பது அல்ல. ஆனால் அந்த எல்லா கவலைகளையும் நாம் வேறு நேர்மறையான கண்ணோட்டத்துடன் எதிர்கொள்ள தயாராகிறோம் என்றே அர்த்தம்].
அந்த எண்ணம் உணரத்துவங்கிய சிறிது நாட்களில் எல்லாம் நாம் நமக்காக வாழ்வதே அந்த காலை நடை [Morning walk] பயனத்துக்காகத் தான் என்பது போல, நாம் அந்த நேர விடியலுக்காக காத்திருக்கத் தொடங்கிவிடுவோம் என்பது மறுக்க இயலாத ஒரு விசயமாகிவிடும்.
பலருக்கு வீட்டிற்கு வெளியே அந்த நேரத்தில் நடப்பது பாதுகாப்பானதாக இல்லாமல் இருக்கும் சுழல் அமைந்திருக்கலாம். அல்லது வீட்டிற்குள் நடப்பது என்பதும், இயலாததாக இருக்கலாம். நமது தமிழில் ”நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு” என்று ஒரு பழமொழி உண்டு. நமக்குத்தெரியும் அல்லவா…நாம் கூறும் காரணங்கள் எல்லாம் நாம் மனது வைத்தால் காணாமல் போய்விடும் என்று. அந்த தடைகளைத் தான் நான் ‘பல்லைக் கடித்துக் கொண்டு முதல் சில நாட்கள் மட்டும் செய்யவேண்டி இருக்கும்’ – என்று கூறினேன்.
காலை நடைப் பயணத்தின் நன்மைகள் : [Advantages of morning walk]
- காலை நடை சென்ற நாள் சுறுசுறுப்பாக ஆரம்பிப்பதை நாமே உணர ஆரம்பிப்போம்.
- அந்த சுறுசுறுப்பு நம் மனநிலையை மேம்படுத்தும்.
- நமக்கு ஒரு நேர்மறையான பார்வையைத் தரும்.
- மறுநாளை நாம் புத்துணர்ச்சியோடு ஆரம்பிக்க முந்தின இரவே நம் மூளை நம்மைத் தயார்ப்படுத்தும்.
- வாழ்க்கை முறையால் தூண்டப்படும் நோய்களை உருவாக்கும் அபாயத்தைக் கணிசமாகக் குறைக்கும்.
- எடை இழப்புக்கு உதவுதல்.
- மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வைக் குறைக்கும்.
- உடல் சகிப்புத்தன்மையை அதிகரிக்கிறது.
- நம் சருமத்தை இளமையாக மாற்றும்.
- கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது.
- இருதய நோய்களைத் தவிர்க்கிறது.
- நாம் எழுந்து செல்ல முடிந்தால், எழுந்து நகர்வதற்கு நாம் அதிக உந்துதல் பெறுவோம்.
- நம் மன திறனை அது அதிகரிக்கிறது.
- நம்முடைய நிமிர்வு மற்றவர்களிடம் நமக்கான மரியாதையைக் கண்டிப்பாக பெற்றுத்தரும்.
இது எல்லாவற்றியும் விட உலகத்தை நாம் பார்க்கும் பார்வையில் மாற்றம் ஏற்பட்டு தன்னம்பிக்கை கொண்ட கண்களைப் பெறுவோம். இது நிச்சயம். ‘காலை நடை’ நடந்து இதனை உணர்ந்து தான் பாருங்களேன், தோழிகளே…
யோசனை – 2